உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

mk stalin

நீட் தோல்வியால் மாணவரும், அந்த சோகத்தில் அவரது தந்தையும் தற்கொலை செய்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் வயது 19, நீட் தேர்வில் தொடர் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம் தாங்காமல், நேற்றிரவு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட தந்தை – மகனுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு மையத்தில் பயின்று வந்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மாணவர் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

அவரது குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ஜெகதீஸ்வரனின் தந்தை செல்வசேகரும் மறுநாளில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஜெகதீஸ்வரன் குடும்பத்துக்கும், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது எனத் தெரியவில்லை. நன்றாகப் படிக்கும் மகன், மருத்துவர் ஆவான் என்று தான் அவரைப் பெற்ற பெற்றோர் நினைத்திருப்பார்கள். ஆனால் நீட் தேர்வு எனும் பலிபீடத்தில் பலியானவர்கள் பட்டியலில் ஜெகதீஸ்வரன் சேர்ந்துவிட்டது மிகக் கொடூரமான நிகழ்வாகும். எந்தச் சூழலிலும் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எந்த மாணவரும், எப்போதும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கும் எனது ஆழமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது மரணமே, நீட் பலிபீடத்தின் இறுதி மரணமாக இருக்கட்டும். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்து காட்டுங்கள், பிறரையும் வாழ வையுங்கள், உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுருக்கிறார்.

Join our channel google news Youtube