டி.கே.சிவகுமார் வழக்கை ரத்து செய்ய மறுப்பு! 3 மாதங்களில் வழக்கை முடிக்க சிபிஐக்கு கர்நாடக ஐகோர்ட் உத்தரவு!

கர்நாடக துணை முதல்வரும்,  காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை  ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. கர்நாடக மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே சிவகுமாரும் செயல்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, கர்நாடகாவில், கடந்த 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் எரிசக்தி துறை அமைச்சராக இருந்த தற்போதைய துணை முதல்வர் டி.கே.சிவகுமார், அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக புகார்கள் எழுந்தன.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், டி.கே.சிவகுமார் தொடர்புடைய 70க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் அடிப்படையில், வருமானத்திற்கு அதிகமாக, ரூ.74.93 கோடிக்கு சொத்து சேர்த்ததாக டிகே சிவகுமார் மீது, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இதுதொடர்பாக டி.கே.சிவகுமார் சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2019 செப்டம்பரில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், 2019 அக்டோபரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மூன்று வருட விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத் துறை வழக்கில் 2022 மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனிடையே, சொத்துகுவிப்பு வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்த நிலையில், 2020-ம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற‌ப்பட்டது.

இதை எதிர்த்து சிவகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, கர்நாடக உயர் நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு செய்திருந்தது. உயர் நீதிமன்ற தடையில் தலையிட மறுத்து, சிபிஐ தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இதனிடையே, தன்மீதான எஃப்ஐஆரை ரத்து செய்ய கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிகே சிவகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் எஃப்ஐஆரை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரி சிவகுமார் தொடர்ந்த வழக்கை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுமட்டுமில்லாமல், சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்ட  கர்நாடக உயர்நீதிமன்றம், 3 மாதங்களில் இவ்வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய வேண்டும் என்றும் சிபிஐக்கு ஆணையிட்டுள்ளது.