தமிழகம் முழுவதும் 1000 மையங்கள்… எதற்காக தெரியுமா? பொது சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

TN Govt: தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் நீர்சத்து குறைபாட்டை போக்கும் மையங்களை அமைக்க உத்தரவு.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அடுத்த சில நாட்கள் தமிழகத்தில் கடுமையான வெப்ப அலை இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

இதனால் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதுபோன்று பல்வேறு அறிவுரைகளையும் பொது மக்களுக்கு வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் வெப்ப அலை எதிரொலியாக தமிழகத்தில் 1,000 இடங்களில் ORS பாக்கெட்டுகள் வழங்கும் மையங்களை அமைக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார். அதாவது, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாட்டை போக்க உப்பு, சக்கரை கரைசலான ஓஆர்எஸ் பவுடரை வழங்க “Rehydration Points” (மறுநீரேற்று) எனும் மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பொது இடங்களில் ஓஆர்எஸ் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் தலா 15 முதல் 25 மையங்கள் என தமிழ்நாட்டில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களிலும் 1000 மையங்களை ஏற்படுத்தி பொது மக்களுக்கு தேவையான ORS பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

சென்னையில் மட்டும் 75 இடங்களில் ORS பாக்கெட்கள் வழங்கும் மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதேசமயம் சுகாதாரமான தூய்மையான குடிநீர் கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மையங்கள் தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.