டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம்.! குடியரசு தலைவர் ஒப்புதல்.!

அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் டெல்லி நிர்வாக மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. அதில் டிஜிட்டல் தனி நபர் பாதுகாப்பு மசோதாவை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றினார்.

கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி மக்களவையிலும், ஆகஸ்ட் 9ஆம் தேதி மாநிலங்களவையிலும் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக மசோதா அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டிஜிட்டல் தனி நபர் பாதுகாப்பு மசோதாவுக்கு கையெழுத்திட்டார். இந்த மசோதாவானது, விரைவில், சட்டமாக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

 டிஜிட்டல் தனி நபர் பாதுகாப்பு மசோதா சிறப்பு அம்சங்கள் :

  • பயனர் தரவுகள், தனிப்பட்ட தகவலைப் பாதுகாப்பதை அந்தந்த செயலிகள் எல்லா வகையிலும் உறுதிசெய்ய வேண்டும்.
  • தரவு மீறல் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு, செயலியின் நிறுவனங்கள் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
  • சிறார்களின் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு அவர்களின் பாதுகாவலர்களிடமிருந்து வெளிப்படையான ஒப்புதல் வேண்டும்.
  • தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒரு தரவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
  •  இந்தியாவிற்கு அப்பால் உள்ள வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட தரவு பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு இந்த மசோதா வழங்குகிறது.
  • இந்த மசோதாவின் கீழ் தனிநபர்களின் தனிப்பட்ட தரவை நிர்வகிக்கும் நிறுவனங்களின் ஆவணங்களை ஆராயவும், அதிகார வரம்பு உள்ளது.