ஏலத்தில் தவறான வீரரை வாங்கிய ப்ரீத்தி ஜிந்தா.. பல லட்சம் இழந்த பஞ்சாப்..!

ஐபிஎல் புதிய சீசனுக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19 நேற்று துபாயில் நடைபெற்றது. வழக்கம் போல ஏலம் இந்தியாவில் நடைபெறாமல் வெளிநாட்டில் ஏலம் நடத்தப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் (ரூ. 24.75 கோடி), பேட் கம்மின்ஸ் (ரூ. 20.50 கோடி) அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள். ஏலத்தின் போது பஞ்சாப் கிங்ஸ் பெரிய தவறு செய்தது. தங்கள் அணியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, பஞ்சாப் கிங்ஸ் தவறான வீரரை ஏலத்தில் எடுத்தது.

​​பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் ப்ரீத்தி ஜிந்தா, நெஸ் வாடியா, பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், ட்ரெவர் பெய்லிஸ் ஆகியோர் இருந்தனர். ஏலத்தின் போது, ​​ஏலதாரர் மல்லிகா சாகர், சத்தீஸ்கர் அணிக்காக விளையாடும் 32 வயதான ஷஷாங்க் சிங்கின் பெயரை உச்சரித்தார். அப்போது அவரை அடிப்படை விலையான ரூ.20 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஷஷாங்க் சிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்ததாக ஏலதாரர் மல்லிகா சாகர் அறிவித்தார். ஆனால், அப்போது தான் தாங்கள் தவறான ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுத்ததை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தெரியவந்தது.

உண்மையில் பஞ்சாப் அணி 19 வயதான ஷஷாங்க் சிங்கை வாங்க முடிவு செய்து இருந்தனர். இதுபற்றி பஞ்சாப் கிங்ஸ் ஏலதாரர் மல்லிகா சாகரிடம் தெரிவித்தார். அவர் ஒருமுறை ஏலத்தில் எடுத்துவிட்டால் அதனை மாற்றமுடியாது என்ற விதிமுறையை கூறி மல்லிகா சாகர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தார்.

தற்போது, ​​சத்தீஸ்கர் அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷஷாங்க் சிங்,  பஞ்சாப்  அணியின் இந்த தவறால் பலன் அடைந்துள்ளார். இந்த சீசனில் அவர் பஞ்சாப் அணியில் விளையாடுவார்.

ஷஷாங்க் சிங் யார்?

ஷஷாங்க் இதற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2022ல் 10 போட்டிகளில் 69 ரன்கள் எடுத்தார்.  அவர் 15 முதல் தர, 30 லிஸ்ட் ஏ மற்றும் 55 டி-20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர், அதில் அவர் மூன்று சதங்களையும் அடித்துள்ளார்.