தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார் – வைகோ

திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர் என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இது குறித்து திருமாவளவன் கூறுகையில்,மனுநீதி நூல்களில் உள்ளது ,பற்றி நான் பேசியதைத் திரித்து, பொய்யைப் பரப்புகிறது வக்கிரபுத்தி கொண்ட கும்பல் என்று விளக்கம் அளித்தார். இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார்  6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். திருமாவளவனுக்கு ஆதரவாகவும் ஒரு சில அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  திருமாவளவன் கூறியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,திருமாவளவன் பெண்களை மதிப்பவர்,பண்பாடு நிறைந்தவர்.திருமாவளவன் மனுநீதி நூல்களில் உள்ள, தவறான கருத்துகளைத்தான் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அதை வேறுவிதமாகத் திரித்து, அவர் மீது, சங் பரிவார் அமைப்புகளின் ஆதரவாளர்கள், குற்றச்சாட்டு கொடுத்து உள்ளனர்.உண்மையில், புகார் கொடுத்தவர்கள்தான் குற்றவாளிகள். திருமாவளவன் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.