வெள்ளத்தில் உடைமைகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டம்..! டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

வெள்ளத்தில் உடைமைகளை இழந்த மக்களுக்கு நிவாரணம் வழங்க திட்டமிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இதில் டெல்லியில் உள்ள யமுனை நதி நீர்மட்டம் 208.48 மீட்டரை எட்டியதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.

கனமழை மற்றும் ஹத்னிகுண்ட் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து யமுனை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகரின் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிலும் உச்சநீதிமன்ற வளாகம் வரை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை 144 தடையையும் விதித்துள்ளது. டெல்லி அரசின் வெளியேற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 16,564 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், யமுனை வெள்ளத்தால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள மக்களுக்காக பல்வேறு பகுதிகளில் நிவாரண முகாம்களை திறந்துள்ளோம். வெள்ளத்தின் போது ஏராளமானோர் ஆதார் போன்ற முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். பின்னர் அவர்களுக்காக சிறப்பு முகாம் அமைக்கப்படும்.

இவற்றை இழந்த குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படும். வெள்ளத்தில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்த மக்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், வட மாநிலங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்லி, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்கண்ட் ஹரியானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய வட மாநிலங்களில் வரும் 19ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.