இபிஎஸ் குறித்து பேச தனபாலுக்கு நிரந்தர தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே விதித்த இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து ஆணையிட்டுள்ளது. வழக்கில் ஆவணங்களை மாஸ்டர் நீதிமன்றத்தில் பதிவு செய்வதற்காக வழக்கு விசாரணையை நவம்பர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில காரியங்களை செய்ததாகவும், கனகராஜ் சகோதரர் தனபால் அண்மைய காலமாக செய்தியாளர் சந்திப்பின்போது கூறி வந்தார். இதுபோன்று கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்து பேசி வந்ததால் பரபரப்பான சுழல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச கார் ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேசி வருகிறார் என்றும் ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரியும் மனுவில் தெரிவித்திருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச கனகராஜனின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தனபால் 2 வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-ஐ தொடர்புப்படுத்திப் பேச கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நிரந்தர தடையாக விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுபோன்று, ஏற்கனவே கோடநாடு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.