நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மறைந்த உறுப்பினருக்கு மரியாதை செலுத்திய நிலையில், மாநிலங்களவை, மக்களவை ஒத்திவைப்பு.

நாட்டில் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர சம்பவம் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதிக்க வாய்ப்பு உள்ளது. ஒடிசா ரயில் விபத்து பற்றி விவாதிக்கவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. மேலும், தமிழக ஆளுநரை திரும்பெருமாறு கோரிக்கை வைக்க திமுக ஆயுதக்கமாகியுள்ளது.

இந்த சமயத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்த பின், மக்களவை பிற்பகல் 2 மணி வரைக்கும், மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தொடர் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், சிறந்த சட்டங்களை உருவாக்க விவாதங்கள் அவசியம், இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் மக்களுக்குப் பயனுள்ள மசோதாக்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றார்.

மணிப்பூரில் 2 மாதத்துக்கு மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி முதல்முறையாக பேசியுள்ளார். அவர் கூறுகையில், மணிப்பூர் வீடியோ சம்பவம் பெரும் வேதனை அளிக்கிறது. இந்தியாவின் தாய்மார்களையும், சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாடும் மணிப்பூர் சம்பவத்தால் அவமானப்பட்டு இருக்கிறது. எனது இதயம் கனத்துள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடூரத்தை என்றும் மன்னிக்க மாட்டோம். மணிப்பூரில் பெண்களை அவமதித்த குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது எனவும் கூறியுள்ளார்.