ஆன்லைன் திரைப்பட விமர்சனங்கள் விவகாரம்.! கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.! 

கேரளாவில், முபீன் ரவூப் என்பவரது இயக்கத்தில் நேற்று (அக்டோபர் 6) வெளியாகியுள்ள திரைப்படம் “ஆரோமலிண்டே அத்யதே பிராணாயாம்”. இந்த திரைப்படத்திற்கு பார்க்காமலேயே விமரிசனங்கள் எழுதுகிறார்கள்.  பார்க்காமலேயே எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். பணம் கேட்டு சில ஆன்லைன் விமர்சகர்கள் மிரட்டுகிறார்கள் என கூறி கேரள உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் முபீன் ரவூப் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கில், ஒரு படம் வெளியாகி 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டும். எதிர்மறையான விமர்சனங்களை தடுக்க அவர்களை அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அந்த மனுவில் மனுதாரர் குறிப்பிட்டு இருந்துள்ளார்.

இந்த மனு கேரள உயர்நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சிஆர்.ராகேஷ் சர்மா,  சினிமா என்பது பலரது கூட்டு முயற்சி மற்றும்  அவர்களின் கனவு, கடின உழைப்பு.  நேற்று (அக்டோபர் 6) வெளியான ‘ஆரோமலிண்டே அத்யாதே பிராணயம்’ திரைப்படம் வெளியான சில நிமிடங்களில் சமூக வலைதளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை எழுதுவது கொடுமையானது.  அதற்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இந்த வழக்கில் மனுதாரர் வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, பலரது கடின உழைப்பும், அதற்கான அர்ப்பணிப்பும்தான் திரைப்படம் என்பதை மறக்க முடியாது. எதிர்மறை விமரிசனங்களால் பலரும் திரைப்பட ஊழியர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரம் குறித்து மத்திய, மாநில அரசுகள் மற்றும் சென்சார் போர்டு  விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.