இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது – சசிகலா

தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என சசிகலா கோரிக்கை. 

ஒடிசா ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ள  நிலையில், இந்த விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், சசிகலா வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே சென்னை-கோரமண்டல் விரைவு ரயில்விபத்துக்குள்ளானதில் இதுவரை 238 நபர்கள் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வருவது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மேலும் இரண்டு ரயில்கள் இந்த கோரவிபத்தில் சிக்கியிருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

மேலும் இதில் 900க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருவது மேலும் அதிர்ச்சியளிக்கின்றன. இது போன்ற ஒரு பேரழிவை யாராலும் தாங்கிக்கொள்ளமுடியாது. இந்த கோர விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை உடனே மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை உரிய விசாரணை மேற்கொண்டு கண்டறிய வேண்டும் என மத்திய மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும், அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.