Newparliament: இன்று முதல்… புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர்!

தலைநகர் டெல்லியில் இருக்கும் பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காக பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. இதற்கான பணிகள் 2020ம் ஆண்டு துவங்கப்பட்டு, 64,500 சதுர அடியில், சுமார் 970 கோடி ரூபாய் செலவில் கட்டிமுடிக்கப்பட்டு உள்ளது.  இந்த நாடாளுமன்ற புதிய கட்டடத்தை பிரதமர் மோடி மே 28ம் தேதி திறந்து வைத்தார்.

புதிய நாடாளுமன்றம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து, எதற்கு இந்த வீண் செலவு, ஏற்கெனவே ஒரு நாடாளுமன்றம் இருக்கும்போது புதிய நாடாளுமன்றத்தை அமைப்பதால் மக்களுக்கு என்ன பயன் என்று விமர்சனங்கள் முன்வைத்தனர். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், குடியரசுத் தலைவரைக் கூட அழைக்காமல், புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து வைத்தார்.

இருப்பினும், புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 3 மாதமாகியும் கூட, அதில் இன்னும் கூட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த சமயத்தில், மழைக்காலக் கூட்டத்தொடரானது புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தக் கூட்டத்தொடர் பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடந்து முடிந்தது. இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்றத்தில் கூட்டப்படும் எனவும் மத்திய அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நேற்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் தொடக்க நாளான நேற்று மட்டும் பழைய கட்டடத்தில் கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவின் கடந்த 75 ஆண்டு ஜனநாயக வரலாறு குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்த நிலையில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டம், பழைய நாடாளுமன்றத்தின் கடைசி நாள் கூட்டமாக நேற்று நடைபெற்ற நிலையில், இன்று புதிய கட்டிடத்தில் நடைபெற உள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று முதல் நடைபெற இருக்கும் கூட்டத்தில் என்ன நடக்க போகிறது என ஒட்டுமொத்த நாடே எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது. இந்த சிறப்புக் கூட்டத்தொடரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவுகள் எடுக்கப்படும் என பிரதமா் மோடி தெரிவித்திருப்பது எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக  நேற்று பழைய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தின் (பழைய கட்டடம்) ஒவ்வொரு செங்கல்லையும் மதிக்கிறோம். அவற்றுக்கு மரியாதை செலுத்துகிறோம்.

மேலும், நாளை முதல் எம்.பி-க்கள் அனைவரும் புதிய நம்பிக்கையுடன், புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவார்கள் என கூறியிருந்தார். எனவே, சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெறும். மேலும், புதிய நாடாளுமன்றத்தில் இன்று முதல் கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், பழைய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.