சாஃப்டர் பள்ளி விபத்து:தாளாளர்,ஒப்பந்தக்காரரை சிறையில் அடைக்க உத்தரவு!

நெல்லை:சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள அரசு உதவி பெரும் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் நேற்று இடிந்து விழுந்ததில்,3 மாணவர்கள் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்பின்னர்,உயிரிழந்த 3 மாணவர்களின் பிரேத பரிசோதனை முடிவுற்ற நிலையில்,உடல்களை வாங்க மறுத்து அவர்களது பெற்றோர் போராட்டம் நடத்தினர்.இதனைத் தொடர்ந்து,சபாநாயகர் அப்பாவு,அமைச்சர் ராஜகண்ணப்பன்,நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும்,மாணவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு,முதல்வர் அறிவித்தபடி நிவாரண உதவிக்கான காசோலையை வழங்கினர்.

இதனையடுத்து,நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,சாஃப்டர் பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால்,இப்பள்ளிக்கு இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில்,3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கிடையில்,கைது செய்யப்பட்ட பள்ளி தலைமையாசிரியை ஞான செல்வி உடல்நலக்குறைவால் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.