மியான்மர் வான்வழித் தாக்குதல்..! பெண்கள், குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழப்பு..!

மியான்மரில் உள்ள கிராமத்தில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியான்மரில் உள்ள ஒரு கிராமத்தின் மீது இராணுவ ஆட்சிக்குழு நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 133 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 20 குழந்தைகளும் அடங்குவர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில், பொதுமக்களை குறிவைத்து மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

அந்த வகையில், சகாயிங் பகுதியின் கன்பாலு நகரில் உள்ள பாசிகி கிராமத்திற்கு வெளியே நாட்டின் எதிர்க்கட்சி இயக்கத்தின் உள்ளூர் நிர்வாக அலுவலகத்தைத் திறப்பதற்காக சுமார் 300 பேர் கூடியிருந்தனர். அப்பொழுது கூடியிருந்த மக்கள் கூட்டத்தின் மீது போர் விமானம் நேரடியாக குண்டுகளை வீசியதாகவும், இந்த தாக்குதல் நடந்து அரை மணி நேரம் கழித்து, ஒரு ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வான்வெளி தாக்குதலில் இறப்பு எண்ணிக்கை 100 ஆக இருந்த நிலையில், தற்பொழுது இறப்பு எண்ணிக்கை 133 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆங் சான் சூகியின் சிவில் அரசாங்கத்தை கவிழ்த்த ஒரு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து, இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த இராணுவ ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு எதிராக நாட்டு மக்கள் போராடி வருகின்றனர்.

இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உள்நாட்டு மோதல் நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு, உலக மக்கள் கண்ணீருடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்திய ராணுவத்திற்கு மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment