மதங்களை கடந்து மனிதம் வளர்த்த கேரள மசூதி கல்யாண வைபோகம்.! ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி பதிவு.!

கேரளாவில் இந்து முறைப்படி, மசூதியில் நடைபெற்ற திருமணத்தை குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பாராட்டியுள்ளார். 

சுதிப்தோ சென் என்பவர் இயக்கத்தில் நாளை வெளியாகும் இந்தி திரைப்படமான் தி கேரளா ஸ்டோரி எனும் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. அதில், இந்து பெண்களை இஸ்லாமியர்கள் சிலர் மதம் மாற்றி, தீவிரவாத அமைப்புடன் சேர வைப்பது போல காட்சிப்படுத்தப்பட்டு, இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என கூறப்பட்டு இருப்பதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.

இந்த சமயத்தில், கேரளாவை சேர்ந்த இடதுசாரி கொள்கை கொண்ட ஒரு நபர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கல்யாண பதிவை பதிவேற்றியுள்ளார். அதில், இதுவும் கேர்ளா ஸ்டோரி தான் என பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு,  கேரள மாநிலத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அஞ்சு என்பவர் குடும்பம் ஏழ்மையில் வாடும் போது, அஞ்சுவின் தாய் அங்குள்ள மசூதியில் திருமணம் நடத்த உதவி கோரியுள்ளார்.

உடனடியாக, செருவாளி மசூதி முஸ்லிம் ஜமாத் கமிட்டியினர் உதவி செய்ய முன் வந்தனர். மசூதியில் அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்து முஸ்லீம் என மத பேதமின்றி பலர் கலந்து கொண்டனர். அங்கு இந்து முறைப்படி சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. மேலும், திருமண சீதனமாக 10 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் அந்த கமிட்டி கொடுத்திருந்தார்கள்.  ஏழை பெண்ணுடைய திருமணத்தை நடத்தி வைத்த ஜமாத் கமிட்டிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதனை பதிவிட்ட அந்த இடதுசாரி ஆதரவாளரின் டிவீட்டை பகிர்ந்து, மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், அனைத்தையும் சரி செய்ய கூடியதாகவும் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.