மீண்டும் எம்பி பதவி! ட்விட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி!

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றத்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு மனுபு அதிரடியான தீர்ப்பை வழங்கியிருந்தது. இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தொடர்ந்த மனுக்களை குஜராத் நீதிமன்றங்கள் நிராகரித்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தை நாடினார்.

அதன்படி, ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அமர்வு, 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைத்து தீர்ப்பு வழங்கினர். அதிகபட்ச தண்டனை வழங்கியதால் ராகுலுக்கு, வயநாடு தொகுதி மக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறி தண்டனையை நிறுத்தி வைத்தனர். உச்சநீதிமன்ற தீர்ப்பால், ராகுல் காந்தியிடம் இருந்து பறிக்கப்பட்ட வயநாடு எம்பி பதவி மீண்டும் வந்தது.

அதன்படி, தகுதி நீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் சார்பில் ஓம்பிர்லாவிடம் வலியுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் எம்பி பதவியை வழங்கியது மக்களவை செயலகம். இதனை இந்தியா கூட்டணி கட்சியினர் கொண்டாடினர். தகுதி நீக்கம் திரும்ப பெற்றதை அடுத்து, நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி பங்கேற்பார் என கூறப்பட்டது.

ஆனால், எம்பி பதவி மீண்டும் கிடைத்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க ராகுல் காந்தி இன்றே நாடாளுமன்றம் வந்துள்ளார். அதன்படி, 134 நாட்களுக்கு பிறகு மீண்டும் மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றம் வந்தார் ராகுல் காந்தி. நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்த ராகுல் காந்தியை காங்கிரஸ் உறுப்பினர்கள், எம்பிக்கள் வரவேற்றனர்.  அதுமட்டுமில்லாமல், தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள முகப்பில் சுயவிவர குறிப்பில் (பயோவில்) மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி என வைத்திருந்த நிலையில், தற்போது ட்விட்டர் பயோவை மாற்றினார்