திருமண மண்டபங்களில் மதுபானத்திற்கு அனுமதியில்லை.! அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்.!

சர்வதேச விளையாட்டு போட்டிகள், மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். 

இன்று காலை தமிழக  அரசு சார்பில் ஒரு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது. அந்த செய்தியில் ஒருநாள் நடைபெறும் நிகழ்வுகளில் அரசு அனுமதி பெற்று மதுபானங்கள் பயன்படுத்தலாம் என கூறப்பட்டு இருந்து. இதனால், ஒருநாள் நிகழ்வான திருமண நிகழ்வுகளில் மதுபானம் அரசு அனுமதியுடன் பயன்படுத்தலாம் என தகவல் பரவியது.

இந்த மதுபான அனுமதி குறித்து தமிழக மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு நிகழ்ச்சிகள், சர்வதேச மாநாடுகளில் மட்டுமே மதுபானங்கள் பயன்படுத்த அனுமதி என்று விளக்கம் அளித்துள்ளார்.

திருமணம் போன்ற ஒருநாள் நிகழ்வுகளில் அரசு அனுமதியுடன் மதுபானம் பயன்படுத்தலாம் என்ற தகவலில் உண்மையில்லை என்றும், திருமண நிகழ்வுகளில் மதுபானம் பயன்படுத்த அரசு ஒருபோதும் அனுமதி தராது என்றும் திட்டவட்டமாக குறிப்பிட்டார். இந்த சர்வதேச நிகழ்வுகளில் மதுபான அனுமதி என்பதும், மற்ற மாநிலங்களில் உள்ளது போல நிபந்தனைகளை பின்பற்றி தான் தமிழகத்திலும் இந்த மதுபான அனுமதி செய்லபடுத்தப்பட உள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.