செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் அறுவை சிகிச்சை செய்தால் நம்புவார்களா.? மா.சுப்பிரமணியன் பரபரப்பு பேட்டி.!

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். 

இன்று கலைஞர் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு சென்னை முழுவதும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் மக்கள் நலத்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு தற்போது அவர் உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பேசுகையில் , தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். அவர் இன்னும் பேசவில்லை. அவரிடம் யார் பேச வேண்டும் என்றாலும் சிரைத்துறையின் அனுமதி பெற்று தான் பேச வேண்டும். பொதுவாக இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் ஐசியுவில் வைத்து இருப்பார்கள், பிறகு பொது வார்டில் வைத்து இருப்பார்கள், அதன் பிறகு தான் வீட்டுக்கு அனுப்பப்படுவர், அங்கும் மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று கண்காணிப்பில் இருக்க வேண்டும் அதன் பிறகு தான் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள்.

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது ஏஆர்.ரகுராம் எனும் மிக பெரிய மருத்துவ நிபுணர். செந்தில் பாலாஜியின் மருத்துவ சிகிச்சையை யார் நம்பவில்லையோ அவர்களை அழைத்து வாருங்கள் நானே அட்மிசன் வாங்கி தருகிறேன். அவர்களை இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள சொல்லுங்கள் என கூறினார். மேலும், வெளிப்படை தன்மை இல்லை என் யாரேனும் கூறினால் செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்தில் வைத்து 15 ஆயிரம் பேர் முன்னிலையில் வைத்து சிகிச்சை அளித்தால் நம்புவார்களா.? என கேள்வி எழுப்பினர் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

அடுத்து மருத்துவ முகாம்கள் பற்றி பேசுகையில், கடந்த வருடம் 1250 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 1411 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதற்க்கு முந்தைய வருடம் 1260 முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த வருஷம் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.