3 கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.? மத்திய அமைச்சரை சந்திக்க உள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன்.!

மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து தொடர்பாக மத்திய சுகாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கான ஒழுங்குமுறை அமைப்பானது, நாட்டில் உள்ள (8 மாநிலங்கள்) சுமார் 150 மருத்துவக் கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் மற்றும் விதிகளுக்கு இணங்காத காரணங்களால் உரிமம் ரத்து எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும், அங்கீகாரம் ரத்தாகும் நிலை இருப்பதால், மருத்துவக் கல்லூரிகள் மேல்முறையீடு செய்ய 30 நாட்களுக்குள் NMCஇல் நேரில் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளின் லிஸ்டில் தமிழகத்தில் உள்ள சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி , தர்மபுரி , திருச்சி ஆகிய மருத்துவ கல்லூரிகளின் உரிமம் ரத்தாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஏற்கனவே தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். சிசிடிவி, வருகை பதிவேடு என சிறு சிறு தீர்க்கக்கூடிய குறைகளுக்கு அங்கீகாரம் ரத்து எனும் பெரிய வார்த்தைகள் குறிப்பிடுவது ஏற்புடையது அல்ல என குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் விவகாரத்தில் நாளை முதல்வரிடம் ஆலோசனை நடத்த உள்ளோம். எனவும்,

அந்த ஆலோசனைக்கு பின்னர் டெல்லி செல்ல முடிவு செய்துள்ளோம் எனவும், அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க ஏற்கனவே நேரம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி சென்று அவரிடம் இந்த விவகாரம் குறித்து கூற உள்ளோம் என கூறினார். மேலும்,  சிறு சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்றும், குறை உள்ளது என்று தெரிந்தால் அரசு நிச்சயம் சரி செய்யும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் குறிப்பிட்டார்.