அரசு பங்களாவை காலி செய்தார் மஹுவா மொய்த்ரா!

கடந்த மாதம் மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வி எழுப்புவதற்கு தொழிலதிபர் ஒருவரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா் தலைமையிலான நெறிமுறைக்குழு விசாரணை நடத்தி, அறிக்கை வெளியிட்டது.

அதில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இந்த பரிந்துரையை ஏற்ற மக்களவை தலைவர் மஹுவா மொய்த்ராவை டிச.8ம் தேதி பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்ட மஹுவா மொய்த்ரா, தனக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை ஜன.7-ம் தேதிக்குள் காலி செய்யுமாறு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்யும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் கேட்டுக்கொண்டது.

கருவறைக்குள் நிறுவப்பட்ட குழந்தை ராமர் சிலை… முதல் புகைப்படம் வெளியானது!

ஆனால், அரசு பங்களாவை மஹுவா காலி செய்யாமல் இருந்து வந்த நிலையில், இதற்கு விளக்கம் கேட்டு மீண்டும், மீண்டும் அரசு எஸ்டேட் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. இதனிடையே, அரசு பங்களாவை காலி செய்யுமாறு தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் என்று மஹுவா மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்தது டெல்லி உயர் நீதிமன்றம். இதையடுத்து, அரசு பங்களாவில் இருந்து மஹுவாவை வெளியேற்ற, அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பியது.

இந்த நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, புது டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். மஹுவா மொய்த்ராவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அரசு பங்களாவின் எண் 9B டெலிகிராப் லேன் இன்று காலை 10 மணிக்கு முழுமையாக காலி செய்யப்பட்டு, எஸ்டேட் இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் வருவதற்கு முன்பே பங்களா காலி செய்யப்பட்டது, எந்த வெளியேற்றமும் நடைபெறவில்லை எனவும் மொய்த்ராவின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.