MadrasHC: தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் சொல்லித்தான் எனது சகோதரர் கனகராஜ் சில காரியங்களை செய்ததாகவும், எனது சகோதரர் கொலை செய்யப்பட்டார் எனவும் கனகராஜ் சகோதரர் தனபால் அண்மைய காலமாக கூறி வருகிறார். கோடநாடு குறித்து பேச கூடாது என்றும் என்னால் தனியாக நடமாட முடியவில்லை, என்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ஒவ்வொரு முறை தனபால் பேட்டியளிக்கும் போதும் கொடநாடு சம்பவத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது என்பதுபோல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்து வருகிறார். இந்த சமயத்தில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்தி பேச கார் ஓட்டுநர் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனது செல்வாக்கை குறைக்கும் வகையில் தனபால் பேட்டியளித்து வருகிறார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்  ரூ.1.10 கோடி நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடக்கோரி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி மனு இன்று நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்ட நிலையில், மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில், கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.