ஐபிஎல் வரலாற்றில் இரு அணியிலும் சதம்…சாதனை படைத்த கோலி- ஹென்ரிச் கிளாசென்.!!

முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் இரண்டு அணி வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிளே ஆப் சுற்று தொடங்கப்படவுள்ளது. எனவே, பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் புள்ளி விவர பட்டியலில் இருக்கும் முதல் 6 அணிகள் நடைபெறும் போட்டியில் அனைத்திலும் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது.

அந்த வகையில், நேற்று (வியாழன்) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது. மேலும், இந்த போட்டியில் இரு அணி தரப்பு வீரர்களும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.

நேற்று நடந்த இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி  51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அதைப்போல பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இரு அணி வீரர்களும் முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.

மேலும், நேற்று சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக சதம் (6) அடித்தவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை  சமன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.