கலைஞர் நூலகம் பணி 2023 ஜன.31க்குள் முடியும் – பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு

2023ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கலைஞர் நினைவு நூலகம் கட்டி முடிக்க திட்டம் என அமைச்சர் எ.வ. வேலு தகவல்.

மதுரை – நத்தம் சாலையில் 2.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.114 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு வருகிறது. ஜனவரி 2ம் தேதி முதல் கலைஞர் நினைவு நூலகம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  மதுரையில் கலைஞர் நினைவு நூலக கட்டிடம் கட்டுமான பணிகளை பொதுபணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று நேரில் சென்று ஆய்வுப் பணி மேற்கொண்டார்.

அப்போது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, 2023 ஜனவரி 31-ஆம் தேதிக்குள் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் பணி முடிக்கப்படும். கலைஞர் நினைவு நூலகத்தை தரத்துடன் விரைந்து கட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.கட்டுமான பொருட்கள் அனைத்தும் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

நூலகத்தில் போட்டி தேர்வுக்காக 30,000 புத்தகங்கள் இடம்பெற உள்ளன என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், பழனி – கொடைக்கானல், கொடைக்கானல் – மூணாறு சாலையை தரம் உயர்த்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 10 மாதங்களில் 15% சாலை விபத்துகள் குறைக்கப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.