ரோஹித் சர்மாவுக்கு அது செட் ஆகாது…ராபின் உத்தப்பா ஓபன் டாக்.!!

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நல்ல தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற போராடுகிறார், ஏனெனில்13 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 19.77 சராசரி மற்றும் 131.12 ஸ்ட்ரைக் ரேட் உடன் 257 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த சூழலில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவை ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்து, வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2023) இறுதிப் போட்டியில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ரோஹித்துக்கு ஓய்வு தேவையில்லை என்று கூறினார். ஊடகத்திற்கு பேட்டியளித்த உத்தப்பா கூறியதாவது  “ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் பெரிய தவறு இல்லை. அவர் கிரீஸில் பேட்டிங் செய்யும்போது, நாம் அனைவரும் அறிந்த ரோஹித் சர்மாவைப் போலவே தான் விளையாடுகிறார்.

ரோஹித் முதலில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின்னர் அதிரடியாக விளையாடுவது தான் அவருக்கு மிகவும் பொருத்தமானது. ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கும் ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்த டெம்ப்ளேட் தான் தவறு. ஆக்ரோஷமான கிரிக்கெட் அவருக்கு செட் ஆகாது.

அவர் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட முறையில் அவர் வெற்றியடைந்தார் என்று நான் நினைக்கிறேன், அவர் மீண்டும் சரியான பேட்டிங்கிற்கு வந்தால், நாம் அனைவரும் அறிந்த ரோஹித் சர்மாவைப் போல் செயல்படுவார்” என கூறியுள்ளார்.