ஆய்வு பணியை தொடங்கியது எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் – இஸ்ரோ தலைவர் பேட்டி

புத்தாண்டு தினமான இன்று இஸ்ரோவின் எக்ஸ்போசாட் என்ற செயற்கைகோள் உள்ளிட்ட 11 செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்கள் போன்ற வானியல் நிகழ்வுகளை விரிவாக ஆராய எக்ஸ்போசாட் (XPoSat) என்ற செயற்கைக்கோள் வடிவமைத்துள்ளனர். சூரியன், சந்திரன், செவ்வாய் தாண்டிய பிரபஞ்சம் பற்றிய ஆராய்ச்சிக்காக செயற்கைகோள் அனுப்பப்பட்டது.

11 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி – சி 58 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில், புவி சுற்றுவட்டப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், புத்தாண்டு தொடங்கியது, பி.எஸ்.எல்.வி- சி -58 ராக்கெட் பூமியிலிருந்து 650 கி.மீ புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் தனது ஆய்வு பணியை தொடங்கியது. இந்த ராக்கெட்டில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கருந்துளைகள், நியூட்ரான் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை கொண்ட 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது என்றார்.

மேலும், 2025ம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். ககன்யான் விண்கலத்தை தயார்படுத்தும் பணிகளை இந்தாண்டு முன்னெடுக்க உள்ளோம். ஆதித்யா விண்கலம் ஜனவரி 6ம் தேதி 4-4.30 மணிக்கு L1 புள்ளியை வந்தடையும். ஆதித்யா L1 அதன் இறுதி கட்டத்தின் தொடக்க புள்ளியில் இருக்கிறது என்றும் 2024ல் மாதம் ஒரு ராக்கெட் என குறைந்தது 12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது எனவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.