சமூக விரோதக் கும்பல்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா? – மு.க.ஸ்டாலின் கேள்வி!

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் உயிரிழந்ததை தொடர்ந்து, சமூக விரோதக் கும்பல்களை தமிழக அரசு காப்பாற்றுகிறதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை – குன்றத்தூர் ஆகிய பகுதிகளுக்கு அருகே நடைபெறும் சமூக விரோத செயல்களை (போதைப் பொருள் விற்பனை) வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளார். இதனால் தொடர் மிரட்டலுக்கு உட்பட்டார். அவரின் தந்தை, காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையம் எடுக்காத நிலையில், நேற்று இரவு மோசஸை அலைபேசியில் அழைத்த மர்மநபர்கள், அவரை வீட்டை விட்டு வெளியே வருமாறு அழைத்தனர். அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினார்கள். மோசஸின் அலறல்சத்தம் கேட்க, அவரின் தந்தை வெளியே வந்து பார்த்தார். வெட்டுக்காயங்களுடன் மோசஸ் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

செய்தியாளர் படுகொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ், காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி, நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.தி.மு.க அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும் என தெரிவித்தார்.

மேலும் அந்த அறிக்கையில், பத்திரிக்கை – ஊடங்களின் கருத்துரிமையின் கழுத்தில் “அரசு கேபிள்” என்ற கயிறு சுற்றப்பட்டு நெரிப்பதும், நெருக்கடி தருவதும் தமிழகத்தில் நடந்துகொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய அவர், செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.க என்றும் துணை நிற்கும் என தெரிவித்துள்ளார்.