மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு வரும் 30ம் தேதி வரை நீட்டிப்பு.!!

கடந்த மே 3 -ஆம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) நடத்திய பேரணிக்குப் பிறகு, குக்கி மற்றும் மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியது. இந்த வன்முறையில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரித்து நாசமாக்கப்பட்டன.

இந்த வன்முறையின் போது 100 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதன் காரணமாக மாநில அரசு இணையச் சேவைக்கு கடந்த 10ம் தேதி தடை விதித்திருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து  மணிப்பூர் மாநிலத்தில் அமைதி மற்றும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைவதைத் தடுக்க, இணைய சேவைகளின் முடக்கம் ஜூன் 30ம் தேதி மாலை 3 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மணிப்பூர் அரசு அறிவித்துள்ளது.

மேலும், மணிப்பூரில் நடைபெற்ற அமைதிக்கான தேசிய மாநாட்டில், மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதில் சிபிஎம் தலைவர் சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், சிபிஐ தலைவர் டி ராஜா, மணிப்பூர் முன்னாள் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.