7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி- சதமடித்தார் ஷ்ரேயஸ் ஐயர்!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாபிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ள நிலையில், ஒருநாள் தொடரில் விளையாடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது.

இதன் படி முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம்(79), ஹென்றிக்ஸ்(74), மில்லர்(35*), க்ளாஸென்(30) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் மொஹம்மது சிராஜ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களை சாய்த்தார்.

279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஷ்ரேயஸ் ஐயரின் சதம் மற்றும் இஷான் கிஷனின் சிறப்பான ஆட்டத்தால் 46 ஆவது ஒவரிலேயே வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 93 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். 45.5 ஓவரில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (282/3) எளிதாக எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் ஐயர் 113* ரன்களும், சாம்சன் 30* ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணி, தொடரை 1-1 என்று சமன் செய்திருக்கிறது. சிறப்பாக விளையாடி சதமடித்த ஷ்ரேயஸ் ஐயர், ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Leave a Comment