காஷ்மீரில் காணாமல் போன இந்திய ராணுவ வீரர்..! கண்டுபிடித்த மீட்ட காவல்துறை..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் அச்சாதல் பகுதியில் வசிக்கும் ஜாவேத் அகமது வானி என்ற இந்திய ராணுவ வீரர் கடந்த சனிக்கிழமை மாலை காணாமல் போயுள்ளார். அவர் மளிகைப் பொருட்களை வாங்குவதற்காகச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள பகுதிகளிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் தேடத் தொடங்கியுள்ளனர். அந்த தேடலின் பொழுது பரன்ஹால் கிராமத்தில் அவரது காரில் ஒரு ஜோடி செருப்புகள் மற்றும் இரத்தக் கறைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்பிறகு, காணாமல் போன ராணுவ வீரரைக் கண்டுபிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், காணாமல் போன ராணுவ வீரர் ஜாவைத் அகமது வானி குல்காம் போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ராணுவ வீரர் மீட்கப்பட்டது குறித்து, காஷ்மீர் மண்டல போலீசார் கூறுகையில், இராணுவ ஜவான் குல்காம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின், கூட்டு விசாரணை விரைவில் துவங்கும் என்றும் மேலும் விவரங்கள் தொடரும் என்றும் ட்வீட் செய்துள்ளது.

மேலும், இந்திய ராணுவ வீரர் கடந்தப்பட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும்,  ராணுவ வீரர் ஜாவேத் அகமது வானி கடத்தப்பட்டதை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. லடாக் பகுதியில் பணியமர்த்தப்பட்ட இவர் விடுமுறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.