மல்யுத்த கூட்டமைப்பு உறுப்பினர் அங்கீகாரத்தை இழந்த இந்தியா.! உலக மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி நடவடிக்கை.! 

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பில் இருந்த பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.  இந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இதனால் 45 நாட்களுக்குள் தேர்தல் மூலம் இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டு இருந்தது.

இந்த தேர்தல் தொடர்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடைபெறும் என அறிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு இன்னும் தேர்தல் நடத்தாமல் இருந்து வந்தது.

இதனை அடுத்து, தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்து உலக மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது. உலக மல்யுத்த கூட்டமைப்பு தான், உலக அளவில் நடைபெறும் மல்யுத்த போட்டிகளை நடத்துவது, விதிமுறைகள் வகுப்பது என பொறுப்புகளை மேற்கொள்ளும்

உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் இனி நடைபெறும் சர்வதேச போட்டிகளில் போட்டியிடும் இந்திய வீரர்கள் இந்தியா சார்பாக போட்டியிடும் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்ட மாட்டார்கள். தனி நபர் என்ற முறையிலே சர்வேதச போட்டியில் களமிறங்கும் சூழல் ஏற்படும். அதனால், இந்த விவகாரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.