முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்.! 

தமிழக சட்டப்பேரவையில் இன்று 3வது நாளாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய நாள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு தனி தீர்மானங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்று, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிரானது. மற்றொன்று மக்களவைத் தொகுதி மறுவரையறை செய்யப்படுவதற்கு எதிரானது.

தொகுதி மறுவரையறை :

மத்திய அரசானது மக்கள்த்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளையும் மறுசீராய்வு செய்து புதிய மக்களவைத் தொகுதி பட்டியலை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள இருந்தது. மக்கள் தொகை கணக்கீட்டின்படி ஒரு தொகுதி மறுவரையை செய்யப்படும் அப்படி கணக்கிட்டால் தமிழகத்தில் 39 தொகுதிகள் குறையும் நிலை ஏற்படும் என முதல்வர் கூறினார்.

சட்டப்பேரவையில் 2 தனித் தீர்மானங்களை தாக்கல் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் :

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் திட்டத்தையும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் என அனைத்தும் ஒரே கட்டமாக ஒரே நேரத்தில் நடைபெறும். அப்படி நடைபெற்றால் தற்போது பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மாநில ஆட்சி பறிபோகும் நிலை ஏற்படும். இதனால் மாநில கட்சிகளுக்கான அந்தஸ்து குறைய வாய்ப்பு உள்ளது.

இந்த இரண்டு திட்டங்களையும் மத்திய அரசு செயல்படுத்தக் கூடாது என்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் பெயரில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆதரவு :

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்திய கூட்டாட்சி உணர்வுக்கு எதிரானது என கூறி வரும் முதல்வர் கொண்டிருந்த தனி தீர்மானங்களுக்கு ஆதரவு என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா கூறினார். அதேபோல மதிமுகவும் தனி தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சி உறுப்பினர் பேசுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என ஆரம்பித்து, ஒரே கட்சி, ஒரே தலைவர், ஒரே நாடு, ஒரே இனம் என ஒரு பாசிச மனப்பான்மையை பாஜக அரசு கொண்டுவர நினைக்கிறது என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்து தனி தீர்மானங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

பாஜக கருத்து :

இதனை எடுத்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசியபோது, தொகுதி மறுவரையறையில் மாநில உரிமை பற்றிய கவலையை பாஜக புரிந்து கொள்கிறது. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு சில உறுப்பினர்கள் மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு பேசுகிறார்கள். அதே போல் சிலர், பாசிச ஆட்சி என அவர்களுக்கு தோன்றிய கற்பனைகளை பேசுகிறார்கள். எனக்கூறுகையில், சபாநாயகர் அப்பாவு, அது அவர்களின் தனிப்பட்ட கருத்து, தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்கிறீர்களா இல்லையா என்பதை கூறுமாறு கேட்டார். அதற்கு, சிரித்துக் கொண்டே, இந்த தீர்மானம் பற்றி பாஜக நடவடிக்கை எடுக்கும் எனக் கூறினார் வானதி சீனிவாசன்.

அடுத்ததாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களுக்கு எதிராக முதல்வர் கொண்டுவந்த தனி தீர்மானங்களுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி எம்எல்ஏ செல்வபெருந்தகை கூறினார்.  இதே போல் விசிக உள்ளிட்ட மற்ற திமுக கூட்டணி கட்சிகளும் முதல்வர் கொண்டு வந்து தனிதீர்மானங்களுக்கு ஆதரவு அளிப்பதாக கூறினர்.

அதனை அடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், ஒரே நாடு ஒரே தேர்தல் என நாட்டை ஒரே மதம் உள்ள நாடாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. மன்னராட்சி அமல்படுத்த பாஜக முயற்சிப்பதாக கூறினார்.

நிறைவேற்றம் :

இதனை அடுத்து குறள் வாக்கெடுப்பு அடிப்படையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை திட்டங்களை மத்திய அரசு செயற்படுத்தக் கூடாது என முதல் மு.க ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Leave a Comment