கோர விபத்து..தனியார் பயணிகள் பேருந்து மீது மோதிய லாரி..! 4 பேர் பலி, 22 பேர் காயம்..!

மஹாராஷ்டிராவில் பேருந்து மீது லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மும்பையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பயணிகள் பேருந்து மீது லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 22 பேர் காயமடைந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கோயில் அருகே இந்த விபத்து நடந்துள்ளது.

தானேவில் உள்ள சதாராவில் இருந்து டோம்பிவிலி நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று நர்ஹே பகுதிக்கு அருகே வந்தபோது, ​​சாலையில் பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் உட்பட லாரி ஓட்டுனர் உயிரிழந்துள்ளதுடன், 22 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவசர மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர். இதில் காயமடைந்த பயணிகள் புனேவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து என்சிபி தலைவரும் எம்பியுமான சுப்ரியா சுலே புனே நகரின் புனே-பெங்களூரு நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை அடைந்தார்.

அவர் கூறுகையில்,இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இங்கு வந்த பிறகுதான், பிரேக் பழுதானதால் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். விசாரணைக்காக காத்திருப்போம். காவல்துறையும் நிர்வாகமும் சிறப்பாகச் செயல்பட்டு காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்று என்சிபி எம்பி சுப்ரியா சுலே கூறினார்.

Leave a Comment