வெளுத்து வாங்கிய கனமழை.. சென்னையில் விமான சேவை பாதிப்பு!

Flight services [file image]

விமான சேவை : சென்னையில் சூறைக் காற்று மற்றும் கனமழை காரணமாக விமான சேவைகள் இரண்டாவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு 9 மணியளவில் இடி மின்னலுடன் தொடங்கிய கனமழை இரவு முழுக்க பெய்தது.

இதனால், எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, சோழிங்கநல்லூர் என நகரின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நின்றதை பார்க்க முடிந்தது.

இந்நிலையில், நேற்று இரவில் சென்னைக்கு வந்த 12 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன, 14 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும், கோழிக்கோட்டில் இருந்து சென்னை வந்த விமானம் திருச்சிக்கும், டெல்லியில் இருந்த வந்த விமானம் பெங்களூருக்கும் திருப்பி விடப்பட்டன.