ஹமாஸ் முக்கிய பிரிவின் தலைவர் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.! ஐடிஎஃப்

இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுக்க ஹமாஸ் அமைப்பினர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது.

இப்போது இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் இடையே நடக்கும் போரினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் பல உலக நாடுகள், இரண்டு தரப்பினரிடமும் போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்தும் இரு நாடுகளிடையே போரை நிறுத்துவதற்கான அறிகுறிகள் இல்லை. இஸ்ரேல் காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் கண்காணிப்பு நிலைகள், ஏவுகணை ஏவுதளங்கள் உட்பட 450-க்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியது. தொடந்து, பள்ளி வளாகங்களில் மறைந்து இருந்த ஹமாஸ் தளவாடங்களை கண்டறிந்து வான்வெளி தாக்குதல் நடத்தியது.

ஹமாஸ் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், மத்திய முகாம்கள் படைப்பிரிவில் உள்ள ஹமாஸின் ஆண்டி டேங்க் ஏவுகணைப் பிரிவின் தலைவர் இப்ராஹிம் அபு-மக்சிப், ஐஎஸ்ஏ மற்றும் ஐடிஎஃப் உளவுத்துறை நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் (IDF) தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, இஸ்ரேலிய பொதுமக்களைத் தாக்கவும், கடத்தவும் மற்றும் கொலை செய்யவும் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகளை அனுப்புவதற்கு உதவியாக இருந்த ஹமாஸின் டெய்ர் அல்-பலாஹ் பட்டாலியனின் தளபதி வேல் அசெபா கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.