ஹரியானா வன்முறை..நூஹ்வை பார்வையிடச் சென்ற காங்கிரஸ் பிரதிநிதிகள்..! தடுத்து நிறுத்திய போலீசார்..!

ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்களன்று இந்து அமைப்பினர் ஊர்வலம் செல்லும் போது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட வன்முறை கலவரமாக மாறியது. இதில் இதுவரை 2 ஊர்காவலப்படை காவலர்கள், 4 பொதுமக்கள் என 6 பேர் இந்த வன்முறை சம்பவங்களில் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ஹரியானா மட்டுமின்றி டெல்லியிலும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் பஜிரங் தள் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் காவல்துறையினர் டெல்லியிலும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுஹ் மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்ட காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் 7 மாவட்டங்களில் 144 தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று குருகிராம் மாவட்டத்தில் மாவட்டத்தில் அமலில் இருந்த 144 தடை உத்தரவு நீக்கப்பட்டது.

இந்நிலையில், ஹரியானாவில் வன்முறையால் பாதிக்கப்பட்ட நூஹ் நகரைப் பார்வையிட எம்.பி தீபேந்தர் ஹூடா மற்றும் மாநில கட்சி தலைவர் உதய் பன் உட்பட ஒன்பது பேர் கொண்ட காங்கிரஸ் பிரதிநிதிகள் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரையும் ரேவாசன் கிராமம் அருகே மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காவல்துறையினர் தடுத்து நிறுத்தியது குறித்து கூறிய தீபேந்தர் ஹூடா, நூஹ் நகர், நல்ஹர் மந்திர் மற்றும் சந்தைகளுக்கு எங்கள் பிரதிநிதிகள் செல்ல விரும்புகிறார்கள். நாங்கள் அனைவரிடமும் பேச விரும்புகிறோம். அங்கு நிறைய போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். இதை முன்பே செய்திருந்தால், மோதல் ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.