Google’s 25th birthday: கேரேஜ் முதல் கண்டங்கள் வரை..! கூகுளின் 25 ஆண்டுகால சாதனை பயணம்.!

உலகின் மிகப்பெரிய டெக் ஜாம்பவான் ஆன கூகுள், அதன் 25 வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக சிறப்பு டூடுல் ஒன்றை அறிமுகப்படுத்திக் கொண்டாடி வருகிறது. அதன்படி, ‘Google’ என்று இருக்கும் டூடுல் ஆனது ‘G25gle’ என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் உருவாக்கப்பட்டதில் இருந்து 1000ற்கும் மேற்பட்ட டூடுல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக 1998ம் ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரும் ‘BackRub’ என்ற தேடுபொறியை உருவாக்கினர். அதன்பின் செப்டம்பர் 27ம் தேதி இந்த தேடுபொறி ‘Google’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு வந்தது.

இந்த Google என்ற சொல் ‘Googol’ என்ற மிகப்பெரிய எண்ணிக்கையைக் குறிக்கும் கணிதச்சொல்லில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டில் இருந்து இன்று வரை பல மாற்றங்கள் கூகுளில் வந்திருந்தாலும், உலகின் தகவல்களை ஒழுங்கமைத்து அதை உலகளாவில் அனைவரும் அணுகக்கூடிய வகையிலும், பயனுள்ளதாகவும் மாற்றுவது என்ற அதன் நோக்கம் மாறாமல் உள்ளது.

அதன்படியே தற்போது உலகம் முழுவதிலுமிருந்து பில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்குத் தேவையான பல தகவல்களைத் தேட, விளையாட்டுகள், படங்கள் போன்றவற்றை பல்வேறு இணையதளங்களில் மற்றும் பதிவிறக்கம் செய்தல் என பலவற்றிற்கு பயன்படுத்துகின்றனர். கூகுளை உருவாக்கிய பேஜ் மற்றும் பிரின், கூகுள்-ன் முதல் அலுவலகமாக கலிபோர்னியாவின் மென்லோ பூங்காவில் வாடகைக்கு எடுத்துக்கொண்ட கேரேஜை மாற்றினர்.

ஆனால், இப்போது கூகுள் அலுவலகங்கள் மற்றும் தரவு மையங்களை ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட ஆறு கண்டங்களில், 200க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்பட்டு வருகிறது. கூகுள் நிறுவனம் தேடுபொறியோடு விடாமல், தனது அடுத்த கண்டுபிடிப்பாக 2000 மாவது ஆண்டில் கூகுள் அட்வர்ட், 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி ஜிமெயில், 2005ம் ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி கூகுள் மேப்ஸ் போன்றவற்றை உருவாக்கி அறிமுகப்படுத்தியது.

தொடர்ச்சியாக, 2006ம் ஆண்டு சமூக ஊடக தளமான யூடியூப்பை $1.65 பில்லியனுக்கு (165 கோடி), பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான ஸ்டீவ் சென், சாட் ஹர்லி மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோரிடம் இருந்து வாங்கியது. இதைத்தவிர கூகுள் டாக்ஸ், கூகுள் வாய்ஸ், கூகுள் டிரைவ் போன்ற எண்ணற்ற தயாரிப்புகளும் உள்ளன. பிறகு, 2006ம் ஆண்டு இணைய உலாவியான குரோம், தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை தலைமையில் பெரிய அளவில் உருவாக்கப்பட்டது.

இதன்பிறகு 2008ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கூகுள் குரோம் பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. குரோம் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் தேதி பதவியேற்றார். இவரது தலைமையில் படிப்படியாக வளர்ந்து வரும் கூகுள், தற்போது உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உலகில் சாதனைகளை படைக்க முயற்சித்து வருகிறது.

அதில் பார்ட் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் சாட்போட்டை, இந்த ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி வெளியிட்டது. இந்த பார்ட் ஆனது உலகில் உள்ள 238 நாடுகளில் 46 மொழிகளில் செயல்பாட்டில் உள்ளது. இந்த 25 ஆண்டுகளில் அசுர வளைச்சி அடைந்துள்ள கூகுள், அடுத்த 25 வருடத்திற்குள் எண்ணிலடங்கா கண்டுபிடிப்புகளை உருவாக்கி எட்டாத உயரத்திற்குச் சென்றுவிடும்.