G20 : வளமான நாட்டிற்கு மனித உரிமைகளும், பத்திரிகை சுதந்திரமும் முக்கியம்.! பிரதமர் மோடியிடம் கூறிய அமெரிக்க அதிபர்.!

கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமை தலைநகர் டெல்லியில்  ஜி20 உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் என பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஜி20 நாட்டு தலைவர்கள் கூட்டமைப்பு முடிந்து நாடு திரும்பிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜி20 கூட்டமைப்பு குறித்தும், அதில் பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்தும் பேசினார். வியட்நாமில் இதுகுறித்து பேசிய ஜோ பைடன்,  , ‘பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற்ற G20 மாநாட்டில் சிறப்பான விருந்தோம்பல் அளிக்கப்பட்டது. இதற்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்தார். அப்போதும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அவரும் நானும் ஆலோசனை நடத்தியுள்ளோம்.  நான் எப்போதும் போல, மனித உரிமைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், வளமான நாட்டைக் கட்டமைக்க மனித வளம் மற்றும் பத்திரிகையாளர்களின் சுதந்திரம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நான் கூறினேன் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாட்டின் போது இந்தியாவுடனான வணிக பேச்சுவார்த்தை பற்றியும் ஜோ பைடன் பேசினார். மேலும் , அமெரிக்காவின் உலகளாவிய தலைமையானது உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியமான சவால்களைத் தீர்க்கும் வகையில் உள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.