வனப்பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மக்களவையில் நிறைவேறியது!

இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புக்கு மத்தியில் வனப்பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மக்களவையில் நிறைவேறியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், மணிப்பூர் வன்முறை குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு மத்தியில், வனப்பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாா்ச் 29ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்த வனப் பாதுகாப்பு திருத்த மசோதாவானது நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஒப்புதலை பெற்ற நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

’வனம்’ என்ற வரையறையின் கீழ் கணிசமான நிலப்பகுதிகள் இருப்பதால், அவற்றை வனம் சாரா நோக்கங்களுக்கு பயன்படுத்துவதை எளிதாக்க இந்த சட்ட திருத்த மசோதாவில் அம்சங்கள் உள்ளன. இம்மசோதாவில் உள்ள மாறுதல்கள் பொருளாதார நோக்கத்திலேயே இருக்கிறது, வனப்பாதுகாப்பு நோக்கில் இல்லை என இயற்கை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

மத்திய அரசால் ‘வனம்’ என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இனி வனப் பாதுகாப்புச் சட்டம் பொருந்தும் என்றும், சா்வதேச எல்லைப் பகுதிகளில் இருந்து 100 கி.மீ. வரை உள்ள 10 ஹெக்டோ் அளவிலான வனப் பரப்புகள், வனப் பாதுகாப்புச் சட்டத்துக்கு உள்படாது என திருத்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதிகளில் பாதுகாப்பு சாா்ந்த கட்டமைப்புகளை மேற்கொள்வதற்காக இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. பயங்கரவாதம் காணப்படும் பகுதிகளில் 5 ஹெக்டோ் அளவிலான வனப் பரப்புகளுக்கும் சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பழங்குடியினருக்கான பள்ளிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.