என்எல்சி நில விவகாரம்.! ஆளும் திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்.!

என்எல்சி நில விவகாரம் தொடர்பாக, ஆளும் திமுக அரசுக்கு எதிரான தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக இபிஎஸ் வெளியிட்டுள்ளார். 

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை நேற்று காலை என்எல்சி நிர்வாகம் தொடர்ந்தது. கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள மேல்வளையமாதேவி கிராமத்தில் விளைநிலங்களில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கதிற்கான கால்வாய் தோண்டும் பணி துவங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.

விளை நிலங்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு என்எல்சி நிர்வாகம் நிலம் கையகப்படுத்தும் முயற்சிக்கு அப்பகுதி மக்கள் மக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும் என்.எல்.சி. நிறுவனம் உரிய இழப்பீடு வழங்காமல் நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக குற்றம்சாட்டினர். இதனால் நிலம் கையகப்படுத்தும் போது பாதுகாப்பு கருதி அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரம் குறித்து நேற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் அருண் தம்புராஜ் விளக்கம் அளித்து இருந்தார். அதில் அந்த நிலங்கள் 10 வருடத்திற்கு முன்பே என்எல்சி நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டு என்எல்சி அதனை உபயோகப்படுத்தால் இருந்தது எனவும், ஏற்கனவே இந்த நடவடிக்கை குறித்து அறிவிப்பு கொடுக்கப்பட்டது என்றும், நிலத்திற்கான கூடுதல் கருணை தொகை, பயிர் இழப்பீடு வழங்கப்படும் எனவும் ஆட்சியர் நேற்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நெய்வேலி விவகாரம் குறித்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதனை அறிக்கை வாயிலாக பதிவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், உரிய முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு திமுக அரசு துணை நிற்கிறது. இதற்கு கண்டனம் எனவும்,  என்.எல்.சி. நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது எனவும் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.