இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை – ஈபிஎஸ்

மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என ஈபிஎஸ் அறிக்கை. 

ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் திரு. டி.கே. சிவக்குமார் அவர்களுக்கும்; இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், காவேரி நதிநீர் என்பது டெல்டா மாவட்ட மக்களின் அடிப்படை உரிமை, காங்கிரசும்-தி.மு.க-வும் இணைந்து இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவேரி படுகை விவசாயிகளையும், காவேரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சிக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே இந்த ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்டை மாநிலங்கள், தமிழகத்தை பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழ் நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன ? தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் உள்ளதால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு மேகதாது அணையை கட்டியே திருவோம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது ?

கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும், அது காவேரி பிரச்சினை என்றாலும், மேகதாது பிரச்சினை என்றாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடுமையாக எதிர்த்தது. கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தி அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது. மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை.

மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று கர்நாடக மாநில அரசை எச்சரிக்கிறேன்.; என  தெரிவித்துள்ளார்.