தாய்மாமன் உருவச்சிலை மடியில் வைத்து குழந்தைகளுக்கு காதணி விழா..!

விபத்து ஒன்றில் உயிரிழந்த சகோதரனின் ஆசையை நிறைவேற்ற அவரது உருவச்சிலையின் மடியில் தனது பிள்ளைகளின் காதணி விழாவை சகோதரி ஒருவர் நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருக்கு வயது 21. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்தார். சகோதரர் மீது அதிக பாசம் கொண்டிருந்த அவரது சகோதரி பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளான (தாரிகா,மோனேஷ்)-க்கு தாய்மாமன்  பாண்டித்துரையின் மடியில் வைத்து காதணி விழாவை நடத்தியிருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினார். ஆனால் பாண்டித்துரை இறந்து விட்டபடியால் அவரை போலவே சிலை ஒன்றை செய்து அச்சிலையின் மடியில் குழந்தைகளை அமர வைத்து காதணி விழா நடத்த பிரியதர்ஷினி முடிவு செய்தார்.

அதன்படி உயிரிழந்த பாண்டித்துரை தத்ரூபமான மெழுகுசிலையை பெங்களூரு கலைஞர்களின் உதவியுடன் ரூ.5,00,000 செலவில் உருவாக்கினர். இச்சிலையுடன் வீட்டில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பின்னர் குதிரைகள் பூட்டப்பட்ட வண்டியில் தாய்மாமன் மெழுகு சிலையை ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குடும்பத்தினர்,உறவினர்கள் சூழ பாண்டித்துரை மெழுகுசிலையின் மடியில் அடுத்தடுத்து குழந்தைகளை அமர வைத்து மொட்டையடித்து, காதுகுத்தி விழாவை நடத்தினர்.

தமிழர் பண்பாட்டில் இருக்கும் முக்கிய உறவான தாய்மாமன் நேரில் வந்து வாழ்த்தியது போன்று இருந்ததாக குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர் சிந்தினர்.