என்னையும், கலைஞரையும் , T.R.பாலுவையும் நீக்கி திமுக வரலாறு கூற முடியாது.! மு.க.ஸ்டாலின் பேச்சு.! 

திமுக எம்பியும், திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய 4 நூல்களை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் டி.ஆர்.பாலு பற்றிய பல்வேறு நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

அவர் கூறுகையில், 17 வயதில் கலைஞர் பேச்சை கேட்டு திமுகவில் இணைந்தவர் டி.ஆர்.பாலு. இப்போது அவருக்கு 80 வயது, எனக்கு 70 வயது இன்னும் இருவரும் ஒரே கொள்கை பிடிப்போடு செயல்பட்டு வருகிறோம். டி.ஆர்.பாலு எழுதிய சுய வரலாற்றில் முதல் பாகத்தில் தான் எப்படி திமுகவில் வந்தேன் என தனது வளர்ச்சி பற்றி இருக்கும். அடுத்தடுத்த நூல்களில் அவரால் எப்படி இந்தியா, தமிழ்நாடு வளர்ச்சி கண்டது என்பது பற்றி இருக்கும்.

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு… எத்தனையாயிரம் காளைகள்.? எத்தனையாயிரம் வீரர்கள்.?

12 ஆண்டுகளாக மத்திய அமைச்சரவையில் டி.ஆர்.பாலு இடம்பெற்றுள்ளார். 3 முக்கிய துறைகளில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். முதல் முறை பெட்ரோலிய துறையில் இருந்த போது 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 15 பெட்ரோலிய திட்டங்களை தமிழகத்திற்கு கொடுத்தவர் டி.ஆர்.பாலு, இரண்டாவது சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த போதும் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தார். கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை கொண்டு வந்தார்.

தமிழகத்திற்கு 334 பாலங்கள் கொண்டு வந்த பெருமை டி.ஆர்.பாலுவையே சேரும். 2004ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட சேது சமுத்திரம் திட்டம் நிறைவேற்றப்பட்டு இருந்தால் இவரது அரசியல் பணிக்கு முத்தான திட்டமாக அமைந்து இருக்கும். ஈழ தமிழர் விடுதலைக்காக ஆட்சியையே இழந்தோம். ஈழ தமிழர் கொடுமைகள் பற்றி இலங்கை அரசு மீது சர்வதேச நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐநாவிடம் பேச நானும், டி.ஆர் .பாலுவும் தான் சென்றோம்.

என்னையும், கலைஞரையும், டி.ஆர்.பாலுவையும் பிரித்து திமுக வரலாற்றை கூற முடியாது. முதலில் நாங்கள் அறிமுகம் ஆகும் போது வாங்க போங்க, அடுத்து வாயா போயா என மாறி அடுத்து வாடா போடா எனும் வளவுக்கு உயர்ந்துவிட்டது. இப்போது அப்படி அழைக்க முடியாது. நான் கட்சி தலைவர் அவர் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் என டி.ஆர்.பாலு பற்றிய பல்வேறு நினைவலைகளை முதல்வர் பகிர்ந்துகொண்டார்.

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வர கூடாது என்பதில் தான் நாம் உறுதியாக நிற்க வேண்டும். 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி தமிழகத்திற்கு எந்த நல்லதையும் செய்யவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய உரிய பேரிடர் நிதியை கூட தரவில்லை என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.