இரவோடு இரவாக பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு! 90 நாட்களில் தேர்தல்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி தலைவருமான இம்ரான் கான் ஆட்சியில் அவர் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவரது ஆட்சியில் பொருளாதாரம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளை பாகிஸ்தான் சந்தித்து வந்தது. இதனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.

தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சி ஆதரவு வழங்கி வந்த கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்ற நிலையில், இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. அதன்படி, பாகிஸ்தான் புதிய பிரதமராக முஸ்லீம் லீக் நவாஸ் ( பிஎம்எல்-என்) கட்சியின் தலைவரான ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார். இதன்பின்னர் இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, அவர் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதில் குறிப்பாக இம்ரான் கான் மீது ‘தோஷகானா’ ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால், இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. இவ்வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து இம்ரான்கான் கைது செய்யப்பட்டு பஞ்சாப் மாகாணத்தின் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய 2 நாட்களே இருந்த நிலையில், முன்கூட்டியே நேற்று நள்ளிராவு இரவோடு இரவாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்தியாவை போன்று பாகிஸ்தானிலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து வருகிறது.

அதன்படி, பாகிஸ்தானில் கடந்த 2018ல் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அங்கு கூட்டணி ஆட்சி அமைந்தது. அதில், பாகிஸ்தானில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இம்ரான் கானின் தெஹ்ரிக் இ இன்சாஃப் கட்சியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் செயல்பட்டார்.

பின்னர் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கிய இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்து, ஸ்லீம் லீக் நவாஸ்கட்சியின் தலைமையில் அரசு பொறுப்பேற்று, பாகிஸ்தான் பிரதமராக அக்கட்சி தலைவர் ஷெபாஸ் ஷெரீப் செயல்பட்டு வந்தார். இந்த சமயத்தில் நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிய மூன்ற நாட்கள் இருந்த நிலையில், நேற்று இரவு கலைக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்ற தேர்தல் 90 நாட்களுக்குள் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலில் இம்ரான் கான் போட்டியிட முடியாது என்பதால் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் ஐந்தாண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.