கேரளா என்ற பெயரை ‘கேரளம்’ என மாற்ற தீர்மானம்..! சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்..!

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி, இன்று நடைபெற்ற கேரள சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை முன்வைத்த முதல்வர், மலையாளத்தில் ‘கேரளம்’ என்று அழைக்கப்படும் மாநிலம், பிற மொழிகளில் கேரளாவாகவே உள்ளது.

தேசிய சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே மலையாளம் பேசும் சமூகத்தினருக்காக ஒன்றுபட்ட கேரளாவை உருவாக்க வேண்டிய தேவை வலுவாக எழுந்துள்ளது என்றார். ஆனால் அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் நமது மாநிலத்தின் பெயர் கேரளா என்று எழுதப்பட்டுள்ளது.

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் ‘கேரளம்’ என்று திருத்தம் செய்து, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளிலும் ‘கேரளம்’ என மறுபெயரிடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இந்த பேரவை மத்திய அரசை ஒருமனதாக கேட்டுக்கொள்கிறது என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.

இந்த தீர்மானத்தை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து, சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர் அவர்கள் கைகூப்பியதன் அடிப்படையில் பேரவையில் இந்த தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.