COTPA Act: 21 வயதிற்கு உட்பட்டவர்கள் புகையிலை பொருள்களை பயன்படுத்தத் தடை.! – கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர்

கர்நாடகாவில் 21 வயதுக்குட்பட்டவர்கள் ஹூக்கா பார்கள் மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதைத் தடை செய்யும் வகையில் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டம் (COTPA) திருத்தப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.

கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், பெங்களூரு விகாஸ் சவுதாவில் விளையாட்டுத் துறை அமைச்சர் பி நாகேந்திரா மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். அதில் பொது இடங்களில் மற்ற புகையிலை பொருட்களை தடை செய்வது குறித்து விவாதித்தார்.

அந்த விவாதத்தின் போது புகையிலை பொருட்கள் வாங்குபவரின் குறைந்தபட்ச வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவர் கூறுகையில், “பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், சுகாதார நிலையம், கோவில்கள், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் போதைப்பொருள் விற்பனை முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.”

“இன்றைய இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி தங்களுடைய பொன்னான எதிர்காலத்தை இழந்து வருகின்றனர்.இதன் பின்னணியில் சட்ட விரோத செயல்களை வேரறுக்க உறுதியான முடிவை எடுத்துள்ளோம். 21 வயதிற்குட்பட்டவர்கள் புகையிலை பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இந்த தடை விதிக்கப்படுகிறது.” என்று கூறினார்.

மேலும், சிகரெட்டுடன் மற்ற புகையிலை பொருட்களை உட்கொள்வதையும் விற்பனை செய்வதையும் தடை செய்யும் வகையில் கோட்பா சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ஹூக்கா பார்களில் போதைப்பொருள் உட்கொள்வதை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியுள்ளார்.