கோரமண்டல் விரைவு ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஷாலிமாருக்கு புறப்பட்டது. 

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, ஷாலிமாருக்கு செல்லும் கோரமாண்டல் விரைவு ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது. காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 3.45 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்கள் சீரமைக்கப்பட்டதால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் ஒடிசாவில் பால்சோர் மாவட்டத்தில் இரவு 7.20 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஒன்று என மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது, இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 21 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தை தொடர்ந்து மீட்பு படையினர் தொடர்ந்து 24 மணிநேரத்துக்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று, தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெட்டிகளை அப்புறப்படுத்தினர். இதனிடையே, விபத்தால் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இந்த சமயத்தில் இன்று நிலைமை சற்று சீராகியுள்ள நிலையில், ரத்து செய்யப்பட்ட ரயில்களில் சில ரயில்கள் இன்று மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ரத்து செய்யப்பட்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.