அமித்ஷா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார்.!!

கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 வாரத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் பாஜகவும், மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் காங்கிரசும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்மையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா கர்நாடக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாகல்கோட்டில் பிரச்சாரம் செய்து வந்தார்.

அந்த பிரச்சாரத்தின், போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ” கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கலவரம் நடக்கும் வாரிசு அரசியலும் வரும். மத கலவரங்களும் வந்துவிடும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி என்பது பின்னோக்கியதாகிவிடும்” என பேசி இருந்தார்.

இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமிஷ்தா தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியது வன்முறையை தூண்டுவதாக இருப்பதாக கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் தற்போது புகார் அளித்துள்ளனர். மேலும்,  அமித்ஷா சாதி, மத மோதலை தூண்டும் விதமாக பேசி கர்நாடகாவின் அமைதியை குலைக்கிறார் என காங்கிரஸ் தலைவர்கள் டி.கே.சிவக்குமார், ரந்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் புகார் கூறியுள்ளனர்.