திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி – அமைச்சர் உதயநிதி

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சிப்பெற்ற மாணவர்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்  கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 1200 இளைஞர்களுக்கு இன்று பணிநியமன ஆணை வழங்குவதில் மகிழ்ச்சி. 4 மாதங்களுக்கு முன்பாக 1400 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்த நிலையில், கடந்த ஆண்டு 13 லட்சம் பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பயிற்சி பெற்றவர்களில் 61,921 பொறியில் மாணவர்கள் மற்றும் 57,312 கலை கல்லூரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி அவர்கள், நான் முதல்வன் திட்டம் கீழ் 1200 மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியுள்ளேன். திமுகவுக்கு யார் போட்டி என்பதில் தான் எதிர்கட்சிகளிடையே போட்டி.

ஆளுநர் மற்ற மாநிலங்களுக்கு சென்று பார்க்கிறாரா என தெரியவில்லை. மற்ற மாநிலங்களை பொறுத்தவரையில் தமிழகத்தில் சாதி பாகுபாடு குறைவு தான். ஆசிரியர்கள் போராட்டம் குறித்து அவர் கூறுகையில், ஆசிரியர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வருமானவரித்துறை சோதனை என்பது தினமும் நடப்பது போல் தான் உள்ளது. அவர்கள் தினமும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் போல மாறி விட்டார்கள். சனாதனம் குறித்து ஆளுநரிடம் தான் கேட்க வேண்டும். சனாதனம்  பற்றி தொடர்ந்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.