பிரதமர் மோடி சுட்ட பல வடைகள் ஊசிபோய்விட்டன… முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு.! 

நேற்று ராமநாதபுரத்தில் திமுக கட்சி சார்பில் தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில் பாஜக ஆட்சி பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.

அவர் கூறுகையில், நாட்டின் கட்டமைப்பை பாஜக சிதைத்துவிட்டது என்று குறிப்பிட்டார். வட மாநிலங்களில் பாஜக சரிவை சந்தித்து வருகிறது என்றும், தான் பிரதமர் மோடியை பார்த்து ஒன்று கேட்க வேண்டும். அதுவும் ராமநாதபுரத்தில் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் ராமநாதபுரத்தில் தான் பிரதமர் மோடி 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக செய்திகள் உலா வருகின்றன குறிப்பிட்டார்.

2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி சுட்ட பல வடைகள் ஊசி போய்விட்டன. அதுவும் தமிழகத்திற்கு என பல ஸ்பெஷல் வடைகள் சுடப்பட்டன. அதில் ஒன்று 2015 ஆம் ஆண்டு அருண் ஜெட்லி நிதியமைச்சராக இருக்கும் போது தமிழகத்திற்கு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என கூறினார்கள். ஆனால், அது டெண்டர் வரை உருண்டு வருவதற்கு 9 ஆண்டுகள் ஆகிவிட்டது என விமர்சித்திருந்தார்.

ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூல் தொகை தமிழகத்தில் இருந்து கொடுக்கப்படுகிறது. அதில் தமிழகத்தின் பங்கு கேட்டால் பிரிவினையை தூண்டுகிறோம் என்று பேசுகிறார்கள். அமைச்சர் எ.வ.வேலு பேசியதை வெட்டி ஒட்டி வாட்ஸ் அப்பில் சிலர் பகிர்ந்ததை பார்த்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேசுகிறார் இது அவர் பதவிக்கு அழகல்ல என குறிப்பிட்டார்.

தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மறந்த முன்னாள் முதல்வர்  1989இல் சட்டமன்றத்தில் ஜெயலலிதா நடத்திய நாடகத்திற்காக நீலி கண்ணீர் வடிக்கிறார். ஆனால் மணிப்பூரில் பெண்கள் ஆடைகள் அவிழ்க்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட போது ஏன் அவர் கண்ணீர் சிந்தவில்லை என கேள்வி எழுப்பினார். பாஜகவின் அடிமையாக அதிமுக செயல்பட்டு வருகிறது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.