சமத்துவபுரம், பூமாலை வணிக வளாகங்கள், புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் புதியதாக கட்டப்பட்ட பல்வேறு அரசு கட்டடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட மற்றும் புதிதாக சீரமைக்கப்பட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 3.12 கோடி செலவில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திறக்கப்பட்டுள்ளது. நெல்லை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், கடலூர், திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 34 கோடி ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மேலும், தமிழக மகளிர் சுய உதவி குழுக்கள் பயன்பெறும் வகையில் 26 மாவட்டங்களில் 5.16 கோடி ரூபாய் செலவில் பூமாலை வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

 வாழ்ந்து காட்டுவோம் எனும் திட்டத்தின் கீழ் 50 கோடி ரூபாய் செலவில் நுண் தொழில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. பனை மரங்கள் பற்றிய நலன்களை பற்றிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயம் காப்பதற்காக விவசாயிகள் எளிதாக தங்கள் மண்வளம் பற்றியும் அதன் தன்மை பற்றியும் எளிதாக அறிவதற்காக தமிழ் மண்வளம் எனும் இணையதளம் இன்று துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் அளவில் பல்வேறு நலத்திட்டங்களை  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார்.